Saturday, April 16, 2011

மக்கள் சக்தி கட்சியின் (தேர்தல்) சீர்திருத்த அறிக்கை - 2011


தேவை தலைகீழான மாற்றம்.
இன்றிருக்கும் அரசியல்வாதிகள் ஊழல் செய்வது, ஓட்டுக்குப் பணம் கொடுப்பது, ஏழை மக்களின் உழைப்பை மது போதை கொடுத்து உறிஞ்சுவது, இளைஞர்களின் மன உறுதியை கேளிக்கையால் திசைத்திருப்புவது, மந்திரி பதவியை மகனுக்கு, மகளுக்கு, மருமகனுக்கு, பேரனுக்கு என்று பங்கு போட்டு மக்களாட்சியை கேலிக்கூத்து ஆக்கிக்கொண்டிருக்கும் சூழலில் ஒரு மாற்றம் தேவைப்படுகிறது.
சேஷியலிச கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட அரசியல் கட்சிகள் இந்திய அளவிலும், தமிழக அளவிலும் சோஷியலிச சமத்துவ சமுதாயத்தைப் படைக்கும் நோக்கிலேயே அரசுத்துறைகளின் செயல்பாடுகளை வடிவமைத்தனர். கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு நூற்பாலைகள், போற்றப்பட்டன. தனியார் துறைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆளும் அரசியல் கட்சிகளின் இந்தப் போக்கு புதிய பொருளாதார கொள்கைகளை 1991க்கு பிறகு இந்தியா பின்பற்றத் துவங்கிய பின் மாறியுள்ளது. ஆனால் இத்தகைய மாற்றங்களை உள்வாங்கி செயல்படுமளவிற்கு அரசாங்கத் துறைகள், அதன் கட்டமைப்புகள் மாற்றப்படவில்லை. சுயநல அரசியல்வாதிகள் இம்மாற்றங்களை கவனத்தில் கொள்ளவில்லை.
அதில்லாமல் கண்மூடித்தனமாக பின்பற்றப்படுகிற தனியார்மய, தாராளமய உலகமயப் போக்கும் தீய விளைவை ஏற்படுத்தியுள்ளன. இவைகளின் விளைவாக லஞ்சமும், ஊழலும் முறைகேடுகளும், வன்முறைகளும் பெருகி நாட்டில் நீதியும் அமைதியும் தொலைந்து போயுள்ளன. இதை மாற்றி அனைத்து துறைகளின் நீடித்த பதுகாப்பான வளர்ச்சிக்கும், அனைத்து தரப்பு மக்களுக்கும் அரசியல், சமூக பொருளாதார நீதி கிடைக்கச்செய்யும் விதமாகவும் மக்கள் சக்தி கட்சி இந்த சீர்திருத்த தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறது.
கிராமப்புற மற்றும் நகர்புற பின்தங்கிய மக்கள் மேம்பாட்டுத் திட்டம்
கிராமப்புற, நகர்ப்புற பிந்தங்கிய பகுதி மக்களிடையே முதலீடு பற்றாக்குறை, தொழில் முனைவின்மை, விழிப்புணர்வின்மை, சந்தை வசதி இல்லாது போதல் போன்ற காரணங்களால் தொழிற்சாலைகள் உருவாவதில்லை. வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தால் வறுமை, அளவிற்கதிகமான மக்கள் விவசாயத்தில் ஈடுபடுவதால் குறைந்த சராசரி வருமானம், நகரமயமாதல் போன்ற தொடர் விளைவுகளினால் பிரச்னை பெரிதாகிவிடுகிறது. இந்நிலையை மாற்ற மக்கள் சக்தி கட்சி கீழ்கண்ட திட்டங்களை முன்வைக்கிறது.
· அரசானது வினையூக்கியாகச் செயல்பட்டு ஏற்றுமதி வாய்ப்புள்ள சிறுகுறு தொழில்கள் பின்தங்கிய பகுதிகளில் ஏற்பட தூண்டுகோலாக இருக்கலாம் என்கிற கொள்கையின் அடிப்படையில் இத்திட்டம் உருவாக்கப்படுகிறது.
· முதலில் 12600 கிராமபஞ்சாயத்துகளிலும், நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சிகளிலும் குறைந்தது ஒன்று வீதம் ஒவ்வொன்றிற்கும் ரூ. 1 கோடி முதலீட்டில் (ரூ.20,000 கோடி முதலீட்டில்) அரசே சிறு தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும்.
· இதற்கென ஏற்றுமதி சந்தை வாய்ப்புள்ள தொழில்களை கண்டறியவும், திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் சிறு தொழில் மேம்பாட்டு ஆணையம் ஒன்று அமைக்கப்படும்.
· ஒவ்வொரு தொழிற்சாலையிலும் குறைந்தது 20 முதல் 25 பேர் வேலைவாய்ப்பு பெரும் வகையில் (மாதச்சம்பளம் ரூ.5000 முதல் 20000 வரை) அங்கு தொழில்கள் உருவாக்கப்படவேண்டும்.
· மக்களுக்கு தொழிற்பயிற்சி அளித்தல், ஈடுபடுத்துதல், உற்பத்தியான பொருட்களை சந்தைப்படுத்துதல் போன்ற பணிகளை முதலில் அரசே மேற்கொள்ளும். இவ்வாறாக உருவாக்கப்பட்ட தொழிற்சாலைகளை அவைகள் துவங்கப்பட்டு ஒரு வருடம் முதல் மூன்று வருட காலத்திற்குள் விருப்பமுள்ள தனியார்களுக்கு அரசாங்கமே நியாயமான சந்தை விலையில் (அல்லது ஏலத்தின் மூலமாக) விற்று விடலாம். ஏனெனில் அரசே உருவாக்கி நடத்திவரும் அமைப்புகள் நாளடைவில் தொழில்முனைவுப் போட்டி, ஊக்கமின்றி நலிவடைந்துவிடலாம். இலாப நோக்கம் கொண்ட தொழில்களை அரசு ஏற்று நடத்தினால் இலஞ்ச ஊழல் பெருகி இறுதியில் தொழில் நசிந்துவிட நேரலாம். எனவே அத்தொழிற்சாலைகள் ஒரு நிலையான ஓட்டத்தை பெற்றவுடன் அவற்றை அரசு விற்று விடலாம். இவ்வாறு செய்வதன் மூலம் அரசு, தான் வழங்கிய முதலீட்டை திரும்பவும் பெற்றுக்கொள்ளலாம்.
பயன்கள்
· பிந்தங்கிய பகுதியில் பொருளாதார சுழற்சி ஏற்படும். தொடர் சுழற்சியின் விளைவாக அப்பகுதி பொருளாதார ஏற்றம் பெறும்.
· அதிகப்படியான மக்கள் விவசாயத்தை நம்பி வேலைவாய்ப்பின்றி சிரமப்படும் நிலை மாறும்.
· நகரமயமாக்குதல் தவிர்க்கப்படும். கிராமப்புறங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படும்.
· நாட்டில் ஏற்றத்தாழ்வு குறையும். வேலைவாய்ப்பின்மையால் அதிகரிக்கும் குற்றங்கள் குறையும். கல்வி, கலை போன்ற அணைத்து துறைகளும் அப்பகுதியில் முன்னேற்றம் பெரும்.
· அரசாங்கத்திற்கும் ஏற்றுமதி மூலம் வருமானம் கிடைக்கும். தொழிலுக்காண முதலீடு எப்போதுமே செலவினம் கிடையாது. அதுபோக அரசு திரும்பப்பெற்றுக்கொள்வதால் இழப்பும் கிடையாது. மறைமுகமாக பொருள் பரிமாற்றம், உற்பத்தி பெருக்கம், வரிவாய்ப்பு மூலமாக அரசுக்கு வருமானம் பெருகும்.
வேளான் சார்ந்த அல்லது வேளான் சாராத எந்த தொழிலாகவும் அங்கே ஏற்படலாம். 2007ல் தமிழக அரசு வெளியிட்ட பொருளாதாரக் கொள்கைக்கு மாற்றுத் திட்டமாக அல்லது மற்றுமொரு திட்டமாக இதை மேற்கொள்ளலாம்
மாற்றியமைக்கப்பட வேண்டிய புள்ளியல் துறை
வருவாய்த் துறையானது மாநில அரசின் தாய் துறையாகக் கருதப்படுகிறது. மாவட்ட நிர்வாகத்தின் தலைமை அலுவலகமாகவும் கருதப்படுகிறது. அதன் செயல்பாடுகளை ஐந்து வகைகளாகப் பிரிக்கலாம். உதவித்தொகை வழங்குதல், விவசாயநிலம் உட்பட பட்டா மாற்றம், சான்று, உரிமம் வழங்குதல், சட்டமன்ற பாராளுமன்ற தேர்தலில் நடத்துதல், இயற்கை இடர்களிலிருந்து மக்களை மீட்கப் பாடுபடுதல்.
இவைகளில் தேர்தல் பணி மற்றும் இயற்கை இடர் பணி இரண்டும் வருவாய்த்துறையின் அன்றாடப் பணிகள் கிடையாது. ஆனால் அப்பணிகள் வந்துவிட்டால் மற்ற பணிகள் அனைத்தும் அப்படியே நிறுத்தப்பட்டு விடும். ஏனெனில் இவைகளுக்கென்று மாற்று ஆட்கள் யாரும் நியமிக்கப் படுவதில்லை. இது மாற்றப்பட வேண்டிய ஒரு குறைபாடு.
அடுத்து பட்டா மாற்றம், பல்வேறு பிரிவினர்களுக்கு உதவி வழங்குதல், சான்று, உரிமம் வழங்குதல் போன்ற பணிகளுக்கு போதுமான மற்றும் நடப்பு தகவல்கள் வருவாய்துறையில் இருப்பதில்லை. பதிவுத் துறையில் பதிவு செய்யப்படும் தகவல்கள் வருவாய்துறைக்கு வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் செயல்படவேண்டியிருப்பதால் பட்டா மாற்றம் வழங்க காலதாமதம் ஆகிறது. நலிந்த மக்களுக்கு உதவி, சான்று, உரிமம் வழங்குதல் போன்ற பணிகளில் அடிப்படை தகவலை ஊர்ஜிதப்படுத்துவதற்கும், அதை இன்றைய தேதிக்கு திருத்தி பராமரிக்கவும் வருவாய்துறையால் முடிவதில்லை. அவைகளை முறையாகச் செய்யவும் காலதாமதம் ஆகிறது.
புள்ளியல் துறையானது உடனுக்குடன் சரியான புள்ளிவிவரங்களை ஏற்று பரமாரித்து வருமானால் அதைப்பயன்படுத்தி நாட்டின் ஒவ்வொரு துறையிலும் வியத்தகு மாற்றங்களைச் செய்ய முடியும் என்பது நம் கட்சி முன்வைக்கும் ஒரு அடிப்படை வழிமுறையாகும்.
10 வருடங்களுக்கு ஒருமுறை புள்ளியல் துறை சேகரிக்கும் தகவல்கள் மத்திய அரசு வசம் வருகின்றன. அவையும் முழுமையானதாக இருக்காது. இந்நிலையை மாற்றி
· தமிழக புள்ளியல் துறையென்று தனியாக ஒரு அமைச்சகத்தின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும். அது மக்களிடமிருந்து பல்வேறு வகையான தகவல்களைப் பெற்று பராமரிக்க வேண்டும். பிற அரசுத்துறைகள் இதனிடமிருந்து தேவையான தகவல்களைக் கேட்டு பெற்றுப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
· மக்கள் தொகை, முகவரி மாற்றம், தொழில் மாற்றம், மக்களின் கல்வி, தொழில் மற்ற திறமைகளின் விவரங்கள் நிலப் பரிமாற்றம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் உடனுக்குடன் சேகரித்துப் பராமரித்தால் நாட்டின் முன்னேற்றத் திட்டத்திற்கும் பொதுமக்களின் தொழில்தேவைக்கும் பெரிய உதவியாக இருக்கும். அதைச் செயல்படுத்தும் வகையில் இந்த அமைச்சகம் உருவாக்கப்பட வேண்டும்.
· விவரங்கள் சேகரிப்பு பத்தாண்டுகளுக்கு ஒருமுறை என்றில்லாமல் இடைவிடாது விவரங்கள் சேர்க்கப்பட்டு புதுக்கப்பட வேண்டும்.
· வருவாய் துறையிடமிருந்து பட்டா வழங்குதல், விவசாயநிலம் பற்றிய தகவல் சேகரிப்பு போன்ற பணிகள் புள்ளியல் துறைக்கு மாற்றப்பட வேண்டும். வருவாய் துறையானது அரசின் இலவச திட்டங்கள், உதவி வழங்குதல் திட்டம் போன்றவற்றிற்கான தகவலை இந்த புள்ளியல் துறையிடமிருந்து பெற்றுக் கொள்ளாலாம்.
· இதே போன்று வாக்காளார் பட்டியல் தயாரித்தல், வாக்காளர் அடையாள அட்டை வழங்குதல், தொகுதி மறுசீரமைப்பு செய்தல் போன்ற பணிகளையும் வருவாய்த் துறைக்குப் பதிலாக புள்ளியல் துறையே மேற்கொள்ளலாம்.
· வருவாய் துறை வழங்கும் பிறப்பு இறப்பு சான்று, உரிமம் வழங்குதல், போன்ற பணிகளையும் புள்ளியல் துறையே மேற்கொள்ளலாம்.
· பதிவுத் துறையின் பணிகளான – ஆவணங்களை பதிவு செய்தல், ஆவணத்தில் அளிக்கப்படும் விவரங்கள் – திருமணப் பதிவு, சங்கங்கள் பதிவு, கூட்டு நிறுவனங்கள் பதிவு, சட்டபூர்வ தீர்வுகள், மக்கள் தங்களுக்குள் ஏற்படுத்துக் கொள்ளும் ஒப்பந்தங்களை பதிவு செய்தல் போன்ற அனைத்து பதிவுத்துறை பணிகளையும் (ஒன்றினைக்கப்பட்ட வருவாய்துறை, பதிவுத்துறை) புதிய புள்ளியல்துறை மேற்கொள்ளலாம்.
காவல்துறை
· 24 மணிநேர சேவை என்கிற அடிப்படை மாற்றப்பட்டு வரையறுக்கப்பட்ட வேலை நேரம் மற்றும் அதிகப்படி வேலைநேரத்திற்கான சம்பளம் நிர்ணயிக்கப்படும்.
· காவல்துறையினருக்கு இராணுவம் போன்று உடற்பயிற்சி மட்டும் வழங்காமல் பொதுமக்களுடன் நட்பாக நடந்துகொள்ளும் வகையில் மனிதநேயம், பொதுஅறிவு, சட்டநுணிக்கம் பற்றி பயிற்சியும் தேர்வுகளும் நடத்தப்படவேண்டும்
· காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் தொடர்பு குடிமைப்பணிகளில் இருப்பதுபோன்று மேம்படும் வகையில் பணிஉயர்வு, பணிமாறுதல், பணியமர்த்தல் போன்ற அதிகாரச் செயல்பாடுகளில் நடைமுறை விதிகள் மாற்றப்படவேண்டும்.
· காவலர்களுக்கான சம்பளம், சம்பள அடிப்படை குடிமைப்பணிகளில் உள்ள அலுவலர்களைப் போன்று தரம் உயர்த்தப்படவேண்டும்.
· குற்றம் எங்கு நடந்தாலும் குற்றத்தை பதிவு செய்பவர்கள் தமிழகத்தில் எந்தவொரு காவல்துறை அலுவலகத்திலும் பதிவு செய்யலாம். அதை சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு மாற்றம் செய்யவேண்டிய பொறுப்பு காவல்துறையையே சாரும் என்ற சட்டம் கொண்டுவரப்படவேண்டும். இதன்மூலம் பொதுமக்கள் அலைகழிக்கப்படுவது தவிர்க்கப்படும்.
· குற்றத்தை பதிவு செய்வது, குற்றத்தை விசாரனை செய்து, விசாரனையின் முடிவுகளை நீதிமன்றங்களுக்குச் சமர்பிப்பது என இவ்விரண்டு பணிகளும் பிரிக்கப்பட வேண்டும். ஒரே போலிசார் (தனிநபர் அல்லது குழு) வசம் இவ்விரண்டு பணிகளும் வழங்கப்படக் கூடாது. பணிகளை தள்ளிப்போடும் அல்லது தவிர்க்கும் நோக்கத்துடன் காவல் துறையினர் செயல்படுவதை இதன்மூலம் தவிர்க்கலாம்.
· காவல்துறையைச் சார்ந்த காவலர்கள் ஆர்டர்லி வேலைக்கு அமர்த்தப்படுவது நிறுத்தப்படவேண்டும் அல்லது அப்பணிக்களுக்குக்கென தனியாக காவலர்கள் நியமிக்கப்படவேண்டும்.
· காவல்துறை உயரதிகாரிகளுக்கு பணிஉயர்வு வழங்குவது, மாறுதல் செய்வது, பணியமர்த்துவது போன்ற அதிகாரங்களில் மாநில அமைச்சர்கள் மட்டும் தங்கள் விருப்பம் போல் செயல்படுவதைத் தவிர்க்க வேண்டும். இப்பணிகளுக்கென காவல்துறை உயர் அதிகாரிகளைக் கொண்ட குழு நியமிக்கப்படும். அக்குழுவிற்கு திட்டமிட்ட வரைமுறைகள் வகுக்கப்படும். அவ்வரைமுறைகளின் அடிப்படையில் மட்டுமே அக்குழு அமைச்சர்களுக்கு பரிந்துரைகள் வழங்கும். அப்பரிந்துரைகளின்படி மட்டுமே அமைச்சர் பணி ஆணை, பணி மாறுதல், பணி உயர்வு போன்ற உத்தரவுகளை வழங்கும் வகையில் சட்டவிதி திருத்தங்கள் கொண்டுவரவேண்டும்.
கல்வி சீர்த்திருத்தங்கள்
பள்ளிக்கல்வி:
அரசுப்பள்ளிகள் வழங்கும் கல்வித் தரத்தின்மீது தொடர்ந்து மக்கள் நம்பிக்கையிழந்து வருகிறார்கள். இதனால் ஆங்காங்கே தனியார் பள்ளிகள் முளைக்கின்றன. கல்விக் கூடங்களுக்குத் தேவையான அடிப்படை நிலம், சுகாதாரம், கட்டிடம், உபகரணங்கள் போன்ற வசதிகளின்றி அவைகள் துவக்கப்படுகின்றன. இதனால் பல விபத்துக்களை தமிழகம் சந்தித்து இருக்கிறது. தனியார் பள்ளிகளில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு சம்பளம் குறைவாகவே தரப்படுகிறது. ஆனால் பல பள்ளிகள் அளவிற்கதிகமாக பணம் வசூலிக்கின்றன என்ற புகார்களும் உண்டு. இவையெல்லாம் இருந்தும் தனியார் பள்ளிகளில் படிக்கவைக்கவே பெற்றோர்கள் விரும்புகிறார்கள். அரசுப்பள்ளிகள் மதிப்பிழந்து வருகின்றன. மேல்நிலைப் பள்ளி முடித்து மருத்துவம், பொறியியல் போன்ற உயர் தொழிற்கல்வி பயில செல்லும் மாணாக்கர்களில் அரசுப் பள்ளியில் பயின்றோர் 2 சதவீதத்துக்கும் குறைவாக இருப்பது மிகவும் வருந்தத்தக்கது. இந்த அவல நிலையை மாற்றி அரசுப் ப்ள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும். அதற்கு மக்கள் சக்தி கட்சி முன்வைக்கும் சீர்திருத்தங்கள்.
மேற்கூறிய பிரச்னைகளுக்கான காரணங்கள் :
· அரசுப் பள்ளிகளில் உள்ள உள்கட்டமைப்பு வசதி சம்பந்தப்பட்டவைகள், அதாவது தேவையான வகுப்பறைகள், கழிப்பிட வசதி, நூலகம், ஆய்வுக்கூடம், கல்வி உபகரணங்கள் இல்லாதது.
· அரசுப் பள்ளிகள் அருகாமையில் இல்லாது போதல்
· மாணவர்கள் – ஆசிரியர்கள் வீதம் மிகவும் அதிகமாக இருத்தல்
· அரசுப் பள்ளிகளின் பாடத்திட்டம்
· ஆசிரியர்களின் ஆர்வமின்மை. பள்ளியின் தரத்தை உயர்த்துவதில் பள்ளி நிர்வாகம், தலைமை ஆசிரியர் பிற ஆசிரியர்களின் கூட்டு ஒத்துழைப்பு, முனைப்பு இல்லாது போதல்.
· கல்வி கற்க வரும் மாணவர்களின் அக்கறையின்மை. அவர்களின் சமூகப் பொருளாதாரச் சூழல் காரணமாக கல்வி கற்பதில் போதிய ஆர்வமற்ற நிலையில் மாணவர்கள் இருப்பது.
· இத்தகைய அரசுப் பள்ளிகளை மேற்பார்வையிட்டு முறைபடுத்த வேண்டிய அரசு கல்வி அதிகாரிகள், அமைச்சர்களின் ஆர்வமின்மை, பொறுப்பின்மை, இலஞ்ச ஊழல் முறைகேடுகள்.
· அரசு பின்பற்றி வரும் தவறான கல்விக் கொள்கை. தனியார் பள்ளிகளுக்கு வாய்ப்பை ஏற்படுத்திவிட்டு புதிய பள்ளிகளைத் திறக்காமல் ஒதுங்கிக்கொள்ளும் அரசின் பொறுப்பற்ற போக்கு, கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்காத மனநிலை.
· ஒட்டுமொத்த மாநிலத்தின் கல்விக் கண்ணோட்டம் மற்றும் அரசியல் சமூக, பொருளாதாரக் காரனிகள்.
தீர்வுகள் :
உண்மையில் கல்வி யாரால் வழங்கப்படுகிறது என்பது முக்கியமல்ல. தனியாராக இருந்தாலும், அரசாக இருந்தாலும் நல்ல கல்வி நம் இளைய தலைமுறையினருக்கு கிடைக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். ஆனால் தனியார் பள்ளிகளை முறைப்படுத்துவதற்கு பதில் தேவைப்படுகிற மாற்றங்களோடு அரசுத் துறையை சீர்படுத்தி நல்ல கல்வியை மாணாக்கர்களுக்குக் கிடைக்கச் செய்வதில் பல நன்மைகள் கிடைக்கின்றன.
கல்விச் சேவையானது பிற பொருள், சேவைகளைப் போன்று இலாப நோக்குடன் இயங்க முடியாத சேவையாகும். அதிக முதலீடும் அர்ப்பணிப்பும் இருந்தால்தான் கல்வியை சிறப்பாக வழங்கமுடியும். எனவே தனியாரைவிட அரசு இச்சேவைக்கு மிகப்பொருத்தமானதாக இருக்கும் அதனால் அரசுப்பள்ளிகளின் தரம் உயற்தி, தேவைப்படுகிற சீர்திருத்தங்களை மேற்கொண்டு அரசே நல்ல கல்வியை வழங்குவதில்தான் நாட்டிற்கு மிக்க பயனுள்ளதாக அமையும். இதை மனதில் கொண்டுதான் மக்கள் சக்தி கட்சி சில திருத்தங்களை முன்வைக்கிறது.
எண்ணிக்கை: பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்பவும் கல்வியின் அவசியத்தை மக்கள் நன்குணர்ந்து வரும் வேளையிலும் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்க வேண்டும். ஆனால் அப்பொறுப்பை தட்டிக் கழித்ததால் தனியார் பள்ளிகள் முளைத்து வருகின்றன. இதைமாற்றி ஆங்காங்கே புதிய அரசுப் பள்ளிகள் துவக்கப்பட வேண்டும். அதை நிறைவேற்ற ஒன்றிய அளாவில் செயல்பட்டு வரும் கல்வி திட்ட அலுவலகங்கள் விரிவு படுத்தப்பட வேண்டும்.
· மக்களுக்கு கல்விச் சேவை வழங்க வேண்டும் என்ற உண்மையான நோக்கத்தோடு செயல்படும் அறக்கட்டளைகள் தவிர பிற தனியார் நபர்கள் மற்றும் அமைப்புகள் இனி பள்ளிக் கூடங்கள் திறப்பதற்கு அனுமதிக்கக்கூடாது.
· ஏற்கனவே செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகள் அரசு நிர்ணயித்திருக்கும் ஒழுங்கு மற்றும் நிபந்தனைகளை பூர்த்தி செய்யாதிருக்கும் பட்சத்தில் அவைகளுக்கு தகுந்த இழப்பீடு வழங்கிவிட்டு அரசு பள்ளிகளாக மாற்றப்படும்.
· இன்று கல்விக்காக ஆண்டு தோறும் ரூ.10,000 கோடி ஒதுக்கப்படுகிறது. அந்நிதி இரட்டிப்பாக்கப்பட்டு கல்வி வழங்குவதே அரசின் தலையாய பணியாக மாற்றப்படும். அந்நிதி முறையாகவும் நேரடியாக கல்விப் பணிக்காகவும் செலவிடப்படும். அந்நிதியைக் கொண்டு கட்டிடங்கள் கட்டுதல், பராமரித்தல் அனைத்து பள்ளிகளிலும் நவீனப்படுத்தப்பட்ட கழிப்பிட வசதி செய்தல், நூலகம், ஆய்வுக்கூடம், கல்வி உபகரணங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கச் செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.
· மாணவர்களிடையே விளையாட்டுத் திறனை ஊக்குவிக்க அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களின் விருப்பப்படி அனைத்து விளையாட்டு பொருட்களும் கிடைக்கச் செய்யப்படும்.
· அதிக பள்ளிகளைத் திறப்பதன் மூலமும் இருக்கின்ற பள்ளிகளை விரிவுபடுத்துவதன் மூலமும் மாணவர் – ஆசிரியர் விகிதம் 30:1 என்கிற அளவு நடைமுறைப்படுத்தப்படும்.
· Pre K.G., L.K.G., U.K.G., போன்ற வகுப்புகள் முறறையே அரும்பு, மொட்டு, மலர் என்ற பெயரில் அரசு தொடக்கப் பள்ளிகளிலும் கொண்டுவரப்படும்.
பாடத்திட்டம் :
· சர்வதேச தரத்திற்கு இணையாக ஒவ்வொரு பள்ளி வகுப்புகளிலும் அரும்பு பருவம் முதல் 12ம் வகுப்புவரை பாடத்திட்டம் வகுக்கப்படவேண்டும். திரு.ச.முத்துகுமரன் அவர்கள் பரிந்துரைப்படி ஆங்கிலோ இந்தியன் பாடத்ததிட்டம், மெட்ரிக்குலேசன் பாடத்திட்டம் எல்லாம் ஒன்றிணைக்கப்பட்டு சமச்சீர் பாடத்திட்டம் அனைத்து வகுப்புகளுக்கும் கொண்டுவரப்படும். (இப்போது தமிழக அரசு கொண்டுவந்திருப்பது முழுமையானதல்ல)
· மாணவர்களின் பல்வேறு திறமைகளை வெளிக்கொண்டுவரும் வகையில் அவர்களின் கல்வித் தர மதிப்பீடுகளில் வழக்கமான பாட மதிப்பெண்களுடன் பிற திறமைகளான, ஓவியம், கலை, நடனம், தொழில் போன்ற பல திறமைகளும் மதிப்பிட்டு சேர்த்துக்கொள்ளப்படும்.
· ஆண்டு தேர்வின் மதிப்பெண்னையொட்டி மாணாக்கர்களின் திறனை மதிப்பிடுவதற்குப் பதில் ஆண்டு முழுவதும் பல்வேறு வகைகளில் அவர்களின் திறன் தொடர் மதிப்பீடுகள் மூலம் மதிப்பிடப்படும்.
· தமிழக அரசு இன்று பின்பற்றி வரும் இருமொழிக்கொள்கையே தொடரப்படும்.
· பொறுத்தமான சமூக, குடும்ப சூழல் வாய்க்கப்பெறாத குழந்தைகள் கல்வியில் ஆர்வமற்றும் இருக்கலாம். இப்படிப்பட்ட மாணவர்களுக்கென்று சிறப்பு வகுப்புகள், கவனங்கள் தேவைப்படுகின்றன. அதில்லாமல் அவர்களுடன் இணைந்து கற்கின்றற பிற மாணவர்களும் வழிதவறி ஒட்டுமொத்த பள்ளியின் சூழலும் தரங்குறைந்துவிடுகிறது. இதுவே இன்றைய பெரும்பாலான அரசுப் பள்ளிகளின் நிலைமையாக இருக்கின்றது. இதை மாற்ற
· ஒவ்வொரு பள்ளிகளிலும் சீர்திருத்த பள்ளி வகுப்புகள் என்று தனியாக வகுப்புகள் துவக்கப்படும். ஆசிரியர்களால் அடையாளப்படுத்தப்படுகின்ற மாணவர்கள் அவ்வகுப்பில் சேர்க்கப்படுவர். அங்கு அவர்களுக்கென்று சிறப்பு மனநல வகுப்புகள், சிறப்பு கவனங்கள் அளிக்கப்படும். அந்த பயிற்சி ஆசிரியர்களால் நற்சான்றிதழ் வழங்கப்பட்ட பின்னர் மீண்டும் பழைய வகுப்புகளில் அவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவர்.
· ஆசிரியர்கள் பள்ளி நிர்வாகம் ஒருங்கிணைப்புடன் கல்வி பயிற்றுவிப்பதில் ஆர்வம் கொள்ளச் செய்தல்.
இன்று அரசுப்பள்ளிகளைக் கண்டால் மக்கள் முகம் சுளிப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று அரசுப்பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர் உட்பட பள்ளி நிர்வாகத்தினர் மாணவர்களின் கல்வி மீது அக்கறையின்றி இருப்பதுதான். இத்தகைய அக்கறையற்ற போக்கு பல்வேறு காரனிகளால் உருவாகின்றன. அவைகள் நீண்ட காலமாக உருவாகி இறுகிப்போயுள்ளன. இதை மாற்ற
· மாணவர்களின் மதிப்பீடைப் போன்றே ஆசிரியர்களின் தரமும் ஆண்டு தோறும் மதிப்பீடு செய்யப்பட வேண்டும். அந்தந்த ஆசிரியர்களிடம் கற்கும் மாணவர்களின் மதிப்பெண்கள், ஆசிரியரைப்பற்றிய மாணவர்களின் மதிப்பீடு, 6ஆம் வகுப்பிற்கு கீழ் இருப்பின் பெற்றோர்களின் மதிப்பீடு மற்றும் பள்ளி நிர்வாகத்தின் மதிப்பீடு எல்லாம் ஒருங்கிணைந்த மதிப்பீட்டின் அடிப்படையில் ஆசிரியர்களின் தரம் மதிப்பிடப்பட்டு அதனடிப்படையில் அவர்களுக்கு சம்பள ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டும். அதாவது ஆசிரியர்களின் மாதச் சம்பளம் ஒன்று அடிப்படை சம்பளம், இரண்டாவது ஊக்கச் சம்பளம் என்று இரண்டாகப் பிரிக்கப்பட வேண்டும். இந்த ஊக்கச் சம்பளம் மேற்சொன்ன மதிப்பீடுகளின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டும்.
· அதே போன்று தலைமையாசிரியர் உட்பட்ட பள்ளியின் பிற அலுவலகத்தினர், நிர்வாகத்தினர்களும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஒன்றிய மாவட்ட கல்வித் திட்ட அலுவலர்களால் மதிப்பிடப்பட்டு சம்பள ஊக்கத்தொகை வழங்கப்படவேண்டும்.
இதை முறையாகச் செய்ய எளிய மற்றும் தெளிவான அளவீட்டுமுறை உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்.
பிற பொது சீர்திருத்தங்கள் :
கல்விக் கூடங்கள் சாதி, சமய, இன, பிரதேச வேறுபாடுகளைக் கடந்து அப்பாற்பட்டு நிற்க வேண்டும். அற, ஒழுக்க வழிமுறைகளின் படியும் சர்வதேச அறிவியலின்படியுமே கல்விக்கூடங்கள் நடத்தப்பட வேண்டும். அங்கு மதப் பிரச்சாரங்களுக்கோ சாதிய நம்பிக்கைகளுக்கோ இடம் இருக்கக்கூடாது, எனவே பள்ளி வளாகங்களுக்குள் அணைத்து வகை மதப் போதனைகளும் நம்பிக்கைகளையொட்டிய பிரச்சாரங்களுக்கும் அனுமதி கிடையாது. அதைத் தடுக்கத் தவறிய நிர்வாகத்தினர் குற்றம் செய்ததாக கருதப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். பாடத்திட்டத்தில் மத சம்பந்தப்பட்ட எத்தகைய பிரசுரங்களும் எவ்வடிவிலும் இருக்கக் கூடாது என்பது மிகக் கண்டிப்புடன் செயல்படுத்தப்படும்.
அரசின் தலையாயப் பணிகளில் கல்வியும் மருத்துவமும் மிக முக்கியமானவைகள். அதன் அடிப்படையில் கல்விக் கொள்கை வகுக்கப்படும்.
· +2வில் வருடத்திற்கு 4 இலட்சமாக இருக்கும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்கல்வியில் பாதிக்கும் குறைவாக குறைந்துவிடுகிறது. அதற்குக் காரணம் உயர்கல்வி கற்க ஆகும் செலவே முக்கியக் காரணம் ஆகும். நம் கட்சியின் இலட்சியக் கொள்கைப்படி கல்வி முழுவதும் அரசின் சேவையாகத்தான் இருக்க வேண்டும். அந்த இலக்கை அடையும் விதமாக அரசுக் கல்லூரிகளின் எண்ணிக்கை பன்மடங்கு உயர்த்தப்படும்.
· சேவை செய்கிறோம் என்று சொல்லி இலாபம் பார்க்கும் தனியார் கல்லூரிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவவைகளின் பதிவு இரத்து செய்யப்படும். தமிழக அரசு தனியார் கல்லூரிகளின் செயல்பாடுகள் பற்றி மேற்பார்வையிடும் உரிமையை மத்திய அரசிடம் கேட்டுப் பெற்று இந்நடவடிக்கை துரிதமாக செயல்படுத்தப்படும்.
· உயர்கல்வித் துறையில் அரசின் பங்கு 5 சதத்திற்கும் கீழாக உள்ளது. 95% தனியார் நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன. இதற்குக் காரணம் கல்வி அறக்கட்டளை என்று சொல்லி முழுவதும் வருமானவரி விலக்கு பெற்று, தனியார் நிறுவனங்கள் கொள்ளை இலாபம் பார்த்து வருவதுதான். அந்நிறுவனங்களை மேற்பார்வையிடும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை. எனவே புதிதாக அத்தகைய கல்வி அறக்கட்டளைகள் துவங்குவோர் மாநில அரசிடம் ஒப்புதல் பெறும்படியும், ஏற்கனவே நடத்தப்பட்டுவருகிற அறக்கட்டளைகள் முறையாக நடத்தப்படுகின்றனவா என கண்காணித்து ஒப்புதல் அல்லது தடையில்லா சான்று வழங்கும்படியும் மாநில அரசுகளுக்கு அதிகாரம் வேண்டும் என்று வலியுறுத்தி மக்கள் சக்தி கட்சி மிகப்பெரிய மக்கள் போராட்டத்தை நடத்தும். அதன் மூலம்தான் இந்த கல்விக் கொள்ளையை தடுத்து நிறுத்த முடியும்.
உயர்கல்வி :
கல்விச்சேவை வழங்குகிறோம் என்கிற பெயரில் வரி ஏய்ப்பு செய்து தனியார் கல்லூரிகள் புற்றீசல்கள் போல கடந்த பல வருடங்களாக முளைத்து வருகின்றன. மக்கள் தங்கள் சந்ததியினர் கல்வி கற்க அதிக விலை கொடுக்க வேண்டியுள்ளது. இந்நிலையை மாற்ற ஐந்து வருடத்திற்குள் மாநிலமெங்கும் 300 அரசு பொறியியல் கல்லூரிகள் திறக்கப்படவேண்டும். மத்திய அரசின் ஒப்புதலுடன் மருத்துவ சேவைத்துறையில் உருவாகும் தேவையை சமாளிக்கவும் மக்களுக்கு தரமான வகையில் மருத்துவம் கிடைக்க வழிசெய்ய அரசு மருத்துவக் கல்லூரிகள் மாவட்டம்தோறும் திறக்கப்டவேண்டும்.
· அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இன்றைய தொழில் துறையின் தேவைக்கேற்ப புதிய பாடங்கள் அறிமுகப்படுத்தப்படும். பாரம்பரிய பாடங்களான பட்டப்படிப்புகளிலும் மத்திய பல்கலைக் கழக மாணியக் குழுவின் ஒப்புதலுடன் புதிய தொழிற்பாடங்கள் புகுத்தப்படும்.
· மாவட்டம் தோறும் அனைத்து பாடத்திட்டங்களிலும் ஆராய்ச்சி கூடங்கள் அமைக்கப்படும்.
· கல்விக்கான அரசின் நிதி ஒதுக்கீடு மூன்று மடங்காக உயர்த்தப்படும். அந்நிதியில் அரசுக் கல்லூரிகளின் சோதனைக்கூடங்கள் நவீனப்படுத்துதல் அடிப்படை வசதிகளாய்ப் பெறுக்குதல், நூலகங்களை மேம்படுத்துததல் போன்ற பணிகள் செய்யப்படும்.
· இதே போன்று ITI, பாலிடெக்னிக் போன்ற பட்டயப்படிப்புகளையும் அரசு மேம்படுத்தும்.
மருத்துவம் மற்றும் சுகாதாரம் :
கட்சியின் கொள்கை மற்றும் அடிப்படைக் கருத்துப்படி மருத்துவ சேவையானது கல்வியைப் போன்றே இலாப நோக்கோடு இயங்கத் தகுதிவாய்ந்த சேவை கிடையாது. அது பொதுநல நோக்கங் கொண்ட அரசினால் வழங்கப்படுவதே சரியானதாக இருக்கும். ஆனால் தொலைநோக்கு பார்வையும் சமூக அக்கறையும் இல்லாத அரசியல்வாதிகளின் நீண்டகால ஆட்சியால் அரசு இச்சேவையிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டு வருகிறது. மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்பவும், மருத்துவ சேவை பெறுவதில் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் விழிப்புணர்விற்கு ஏற்பவும் அரசு மருத்துவமனைகள் உருவாகவில்லை. எனவே இச்சேவை தனியார்வசம் போய்விட்டது. அவர்களோ மக்களின் மிகமிக அத்தியாவசியமான உயிர் மற்றும் உடல் பாதுகாப்பில் வியாபாரம் செய்து வருகிறார்கள். பல்வேறு கொடுமைகளையும், அநியாயங்களையும் மக்கள் சந்தித்து வருகிறார்கள். மருத்துவ அறிவு அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லாததால் தனியார் மருத்துவமனைகள் பகல் கொள்ளையடித்து வருகின்றன. உயிருக்கும் உத்தரவாதமில்லை என்றாகி வருகிறது. இந்நிலை மாற்றப்பட வேண்டும். அதன்படி மக்கள் சக்தி கட்சி முன்வைக்கும் சீர்திருத்தங்கள்.
· சென்னையில் இருக்கும் அரசு பொது மருத்துவமனை போன்ற கட்டமைப்பில் மாவட்டந்தோரும் ஒரு மருத்துவமனை உருவாக்கப்படவேண்டும். சிறு மருத்துவமனைகளை அரசு தொடர்ந்து மாநிலமெங்கும் திறக்க வேண்டும்.
· தனியார் மருத்துவமனைகள் அரசு வகுக்கும் சுகாதார நிபந்தணைகளின்படி இயங்குகிறதா என்று முறையாக அரசால் கண்காணிக்கப்பட வேண்டும். அதை அந்த மாவட்ட தலைமை மருத்துவமனை மேற்கொள்ளவேண்டும்.
· அரசு மருத்துவமனைகளின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் அதை உடனுக்குடன் பராமரிக்கும் பணிகளும் முதன்மையான கவனத்துடன் பேணப்பட வேண்டும்.
· மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள், அலுவலர்களின் சம்பளம் இரண்டாக பிரிக்கப்பட்டு முதலாவது அடிப்படைச்சம்பளம் இரண்டாவது ஊக்கச் சம்பளம். ஊக்கச்சம்பளமானது அம்மருத்துவமனை மற்றும் குறிப்பிட்ட நபர் கையாளும் நோயாளிகளின் எண்ணிக்கை அல்லது செயல்பாடுகளின் அடிப்படையில் மாதந்தோரும் கணக்கிடப்பட்டு வழங்கப்படவேண்டும்.
· நாளாவட்டத்தில் தனியார் மருத்துவமனைகளே இல்லை என்கிற இலக்கை நோக்கி அரசின் மருத்துவ சேவைகள் வழங்கப்பட வேண்டும்.
சுகாதாரம் :
பொதுப் போக்குவரத்து மற்றும் மக்கள் கூடும் இடங்களில் கழிப்பிட வசதிகளைப் பெருக்கவும், பராமரிக்கவும் அரசு மிகுந்த முனைப்பு காட்ட வேண்டும்.
காற்று, நீர், ஒலி, நிலம், ஓசோன் போன்றவற்றை மாசுப்படுத்தும் போக்கை அரசு மிகக் கவனத்துடன் செயல்படுத்தி தடுக்க வேண்டும். அதைச் செய்ய மாசுக்கட்டுப்பாட்டு வாரியப் பணியாளர்கள், அலுவலகங்கள், வழிமுறைகள் இவற்றை பன்மடங்கு அதகரிக்க வேண்டும். 10,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் அல்லது கூடும் இடங்களுக்கு ஒன்று என்கிற விகிதத்தில் மாசுக் கட்டுப்பாட்டு அலுவலகங்கள் திறக்கப்பட வேண்டும்.
பொதுப்பணித் துறை :
ஆங்கிலேயர்களின் காலத்தில் 1850ல் முதன்முறையாக பொதுப்பணித் துறை உருவாக்கப்பட்டது. அதன்பின்னர் அரசின் பணிகளை பலதுறைகளாக பிரிக்கும்போது செய்யப்போகும் வேலைகளின் அடிப்படையில் பிரிக்கும் முறை கடைபிடிக்கப்பட்டது. அரசின் கட்டிடங்களைக் கட்டுதல், பராமரித்தல், அணைகள் கட்டுதல், பராமரித்தல் போன்ற பணிகளை மேற்கொள்வதற்காக இத்துறை உருவானது. அரசுப் பள்ளிகள், மருத்துவமனைகள், மாவட்ட ஆட்சித்துறை கட்டிடங்கள், நீதித்துறை கட்டிடங்கள், சிறைத்துறை, நினைவகங்ககள் உள்ளிட்ட பொதுக் கட்டிடங்களை கட்டி பராமரிக்கும் பணிகளை உள்ளடக்கியது இத்துறை. காவல்துறை இப்பட்டியலில் வராது. ஆனால் இவற்றில் ஒவ்வொன்றும் அரசின் வேறு வேறு துறைகளைச் சார்ந்ததாக இருக்கும். உதாரணத்திற்கு வருவாய் துறைக்கு தேவையான கட்டிடங்களை பொதுப்பணித்துறை கட்டிக்கொடுக்கும். வருவாய்துறை நேரடியாக கட்டிடப்பணிகளைச் செய்யாது. இப்பணிகளை பொ.ப.து. தனியார்களை வைத்துதான் செய்து வருகிறது என்பதை கவனிக்கவும். இவ்வாறாக பிறரின் சார்பாக பணிகளை மேற்கொள்வதினால் ஊழலும் முறைகேடும் மிகவும் மலிந்த துறையாக பொதுப்பணித்துறை மாறிவிட்டது. அளவிற்கதிகமான செலவு செய்தும் தரமான முறையில் அரசுக் கட்டிடங்கள் பராமரிக்கப்படுவதில்லை. ஊழல்களும் வெளியே தெரிவது இல்லை. முற்றிலும் திரைமறைவில் நடக்கிது மாபெரும் முறைகேடுகள்.
· இத்துறையின் தேவையற்ற இடைஞ்சலிலிருந்து நெடுஞ்சாலைத் துறை, காவல்துறை, போன்ற துறைகள் பிரிந்துவிட்டன. அதே வழிமுறையைப் பின்பற்றி ஒட்டுமொத்தமாக பொதுப்பணித்துறை (கட்டடம்) என்கிற துறையையே எடுத்துவிடலாம். அந்தந்த துறைகள் அதனதன் கட்டிடங்களை கட்டி பராமரித்துக் கொள்ளலாம்.
· ஒவ்வொரு தமிழக அரசுத் துறையிலும் கட்டிடப் பராமரிப்புப் பிரிவு என்கிற அலுவலகத்தை திறக்க வேண்டும். அந்த அலுவலகம் அத்துறைக்குத் தேவையான புதிய கட்டிடங்களைக் கட்டுதல், பராமரித்தல் போன்ற பணிகளை தனியார் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெற்று ஒப்பந்த பணிகள் மூலம் அப்பணிகளை மேற்கொள்ளலாம்.
· பொதுப்பணி நீர்வள ஆதாரத் துறையானது மாநிலத்தில் பாசன திட்டங்களை செயல்படுத்துதல் மற்றும் பாசன அமைப்புகளை பராமரித்தல் பணிகளைச் செய்து வருகிறது. அத்துறை மட்டும் தொடரலாம்.
பணைத் தொழில் :
மக்கள் இயற்கையை சார்ந்து வாழ்ந்த காலத்தில் பனைமரத்தின் பயன்கள் மிகவும் அதிகமாகும். உணவுப் பொருட்களாகவும், வீடு கட்டவும், வீட்டு உபயோகப் பொருட்களாகவும் பனைமரப் பொருட்கள் தமிழர்களின் வாழ்வியல் அடையாளாங்களாக இருந்தன. அத்தொழிலை பெரும் எண்ணிக்கையிலான மக்கள் செய்துவந்தனர். இன்றைக்கு அத்தொழில் நலிவடைந்து வருகிறது. அத்தொழிலை செய்துவரும் மக்கள் பின்னடைந்து வருகின்றனர். கைவினைப் பொருட்களின் தேவை வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் ஏராளமாக உள்ளன. அதைப் பயன்படுத்தி இத்தொழிலில் அதிக வருமானம் வரும் வகையில் அரசு இத்தொழிலை ஊக்குவிக்கலாம்.
· பனைமர கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி வாய்ப்புகளை அரசு கண்டறிந்து கொடுக்கலாம். அதற்கென சிறப்பு முனையங்களை ஏற்படுத்தப்பட வேண்டும்.
· பனைமரங்கள் சொறிவுள்ள இடங்களில் விரிவாக்கம் மற்றும் தொழில் உதவி மையங்களை அரசு உருவாக்கி ஊக்கப்படுத்த வேண்டும்.
· கள்ளுக்கான தடை நீக்கப்பட வேண்டும். மக்களின் சுகாரத்ததிற்கு தீங்கிழைக்காதவாறு கள் இறக்க அனுமதியளிக்க வேண்டும்.
பொது விநியோகத் திட்டம்:
பிற மாநிலங்களைப் போல் இல்லாமல் தமிழகத்தில் பொது விநியோகத் திட்டம் குறிப்பிட்ட மக்களுக்கு மட்டும் என்றில்லாமல் அனைவருக்கும் ரேஷன் பொருட்களை விநியோகித்து வருகிறது. வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களை மட்டும் அடையாளம் கண்டு பராமரிப்பதில் நடைமுறைச் சிக்கல் இருப்பதாகச் சொல்லி இம்முறை பின்பற்றப்படுகிறது. அதாவது அனைவருக்கும் உணவு பாதுகாப்பு வழங்கும் பொறுப்பை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. எப்பொருளும் வேண்டாத குடும்ப அட்டையை பெற்றுக்கொள்ளவும் மக்களுக்கு வாய்ப்பு தரப்படுகிறது. ஆனால் அதை பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிகவும் சொற்பமாகும். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் இந்திய உணவுக் கழகத்திடமிருந்து பொருட்களைப் பெற்று நியாயவிலை அங்காடிகளுக்கு பொருட்களை விநியோகித்து வருகிறது. நியாயவிலைக் கடைகள் பெரும்பாலும் கூட்டுறவுச் சங்கங்களாலும் சில தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தாலும் நடத்தப்படுகின்றன. மண்ணென்ணை விநியோகத்திற்கு மட்டும் ஒருசில தனியார் சில்லரை வியாபாரிகள் நியாயவிலைக்கடைகள் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான முறையில் கீழ்கண்ட குறைபாடுகள் உள்ளன.
மிகக்குறைந்த விலையில் 30 பேருக்கு வழங்கவேண்டியதை 100 பேருக்கும் வழங்குதல் தேவையற்ற முறையில் அரசு சுமை ஏற்கிறது. அதன் பணிகளில் விரைவுத்தன்மை குறைந்துவிடுகிறது. பயன்படுத்தாத அட்டைகளுக்கும் சேர்த்து பொருட்கள் பெறுவதால் பதுக்கல், ஊழல் மலிந்து விடுகின்றன. வெளிச்சந்தையில் ரேஷனில் வழங்கப்படும் பொருட்களின் மீதான விலை தன்னியல்பாக இல்லாமல் ஏற்ற இறக்கங்களைச் சந்திக்கிறது. உண்மையான பயனாளிகள் ரேஷன் கடைகளில் காத்துக்கிடக்க நேரிடுகிறது. எனவே
· அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தை அரசு கைவிடவேண்டும். உண்மையான பயனாளிகளை அடையாளாம் காண வேண்டும்.
· ரேஷன் கடைகளில் அனைத்துவகை மளிகைப் பொருட்கள், மற்றும் அனைத்து அத்தியாவசியப் பொருட்களை வழங்கும்படி மேலும் விரிவுப்படுத்தலாம். வழங்கப்படும் அளவையும் அதிகரிக்கலாம்.
· மாதத்தின் எல்லா வேலை நாட்களிலும் எல்லா பொருட்களும் கிடைக்குபடியும் பார்த்துக்கொள்ள வேண்டும்.
· அங்காடிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க வேண்டும்.
கூட்டுறவு சங்கங்கள் அதன் உண்மையான நோக்கம், தன்மையுடன் நடத்தப்படுவதில்லை என்பது அனைவரும் அறிந்ததுதான். எனவே
· தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகங்களே நேரடியாக பொருட்களை விநியோகம் செய்ய வேண்டும். ஐந்து வருட காலத்திற்குள் இம்மாற்றத்தினை செய்ய வேண்டும்.
· விண்ணப்பம் பெற்று அதனடிப்படையில் மட்டும் குடும்ப அட்டை வழங்கும்முறை கடைபிடிக்கப்படுகிறது. அதற்குப்பதில் நாம் தெரிவித்துள்ளவாறு ஒருங்கிணைக்கப்பட்ட புள்ளியல்துறை தாங்கள் பெறும் உடனுக்குடனான தகவல்களின் அடிப்படையில் அரசு தாமாகவும் குடும்ப அட்டைகளை வழங்கலாம்.
· குடும்ப அட்டைகள் வழங்குதல் மற்றும் பராமரித்தல் பணிகளை இனி புள்ளியல் துறை மேற்கொள்ளும்.
· நியாயவிலைக்கடைகள் கணினிமயமாக்கப்பட வேண்டும். அனைத்து தகவல பராமரிப்பும் அதன்மூலம் மேற்கொள்வதன் மூலமாக விரைவான சேவை வழங்கலாம். ஒவ்வொரு அட்டைதாரரும் தங்கள் அடையாள அட்டையைக் காட்டி தங்கள் அட்டையின் எண்னை மட்டும் குறிப்பிட்டு பொருட்களை பெற்றுக்கொள்ளும்படி வசதிகள் செய்ய வேண்டும்.
· நியாயவிலை அங்காடிகள் சிறிய இடத்ததிற்குள் செயல்பட்டு வருகின்றன. அதனால் மக்கள் நெருக்கடிக்கு உள்ளாகிறார்கள். பொருட்களை காட்சிக்கு வைக்கும் அளவிற்கு அவை இயங்க வேண்டும். இவ்வாறாக அடிப்படை வசதிகளை மேம்படுத்த ஒரு அங்காடிக்கு 10 இலட்சம் வீதம் அரசு செலவிட்டு தரமுயற்த வேண்டும்.
சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி நிதித்திட்டம் ஒழிப்பு :
மக்களுக்கான சேவைகளை கண்டறிந்து வழங்குவதற்கு பல்வேறு அரசுத் துறைகள் உள்ளன. இதில் இரட்டை மையங்களை உருவாக்குவது தேவையற்றது. அதுபோக அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலகங்களில் நேரடியாக சட்டமன்ற உறுப்பினர்கள் எவ்வகையிலும் தலையிடுவது முறையாகாது. அவர்கள் ஒட்டுமொத்த மாநிலத்தின் சார்பாக பேசவேண்டிய இடம் சட்டமன்றம் மட்டுமே ஆகும். சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் அதிகாரத்தை மக்கள் தொடர்பையும் அதிகரித்துக்கொள்ள அரசியல்வாதிகளால் கொண்டுவரப்பட்ட சூழ்ச்சித்திட்டமே இந்த தொகுதிநிதித்திட்டமாகும். இது முற்றிலும் ஒழிக்கப்படவேண்டும்.
கூட்டுறவு சங்கங்களை முறைப்படுத்துதல் :
விவசாயம், நெசவாளர்கள், மீனவர்கள், நியாய விலைக் கடைகள், கைவினைப் பொருட்கள், கரும்பாலைகள், சிறு குறு தொழில்கள் மற்றும் பிற துறைகளில் கூட்டுறவு சங்கங்களின் பெருக்கத்திற்கு அரசு மிகப்பெரும் ஆக்கமும் ஊக்கமும் நீண்டகாலமாக கொடுத்துவருகிறது. புதிய பொருளாதார கொள்கையின் செயல்பாட்டில் கூட்டுறவுக் கோட்பாடுகளை மக்கள் மெல்ல மெல்ல மறந்து வருகிறார்கள். அதன் உண்மைத் தன்மை மங்கி வருகிறது. அனைத்து வகை கூட்டுறவு சங்கங்களும் பெயரளவிற்கு சுரத்தில்லாமல் இயங்கி வருகின்றன். ஒவ்வொரு கூட்டுறவு சங்ககத்திலும் அதன் உறுப்பினர்கள் யார்? யார்? அதன் இயக்குனர்கள் யார் என்கிற அடிப்படை தகவல் கூட கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்குத் தெரியாது. பல சங்கங்களின் உறுப்பினர்கள் அரசின் உதவி பெறும் திட்டங்களின் நிபந்தனைகளுக்காகவே சேர்கின்றனர். இவ்வாறு கூட்டுறவு சங்கங்கள் அதன் உண்மைத் தன்மை கெட்டு மதிப்பிழந்து வருகின்றன. ஆனால் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களிடையேயும், அப்பகுதிகளிலும் கூட்டுறவு சங்கங்களின் தேவை இருக்கவே செய்கிறது. இவற்றை கருத்தில் கொண்டு….
· பொறுத்தமற்ற, பணியிழந்துபோன அனைத்து துறைகளிலுமுள்ள கூட்டுறவு சங்கங்கள் கலைக்கப்படவேண்டும். ஏனெனில் அதன்மூலம் தேவையற்ற ஆளுமையை சம்பந்தமில்லாத இயக்குனர்கள் செய்து வருகிறார்கள். ஊழல்கள் மலிந்து வருகின்றன. தேவையற்ற பணம் விரயமாகிறது.
· உண்மையாகவே தேவையுள்ள இடங்களில் கூட்டுறவு சங்கங்களின் தன்மை, அவசியம், பணிகள் குறித்து பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு புதிய புதிய கூட்டுறவு சங்கங்கள் உருவாக அரசு விளம்பரப்படுத்த வேண்டும். ஆனால் அரசின் தயவில் கூட்டுறவு சங்கங்கள் நடத்தப்படக் கூடாது. தயவு காட்டுவதாக எண்ணிக்கொண்டு அரசே கூட்டுறவுச் சங்கங்களின் வீழ்ச்சிக்கும் காரணமாக இருக்கிறது.
இயற்கை வளம்:
மத்திய மாநில அரசுகள் இயற்கை கனிம வளங்கள், தாதுக்களை வெட்டி எடுத்தல் போன்ற பணிகளை ஒருபோதும் தனியாருக்கு வழங்கக் கூடாது. அதுவும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கண்டிப்பாக அனுமதியில்லை எங்கிற கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும். அத்தகைய கனிமவளங்கள் தேவை என்று நினைத்தால் அரசுதான் தொழிற்ச்சாலைகள் துவங்கவேண்டும். அரசாங்கமே அப்பகுதி மக்களுக்கு நிலங்களுக்கான இழப்பீட்டை சந்தை விலையில் வழங்கியும், அவர்கள் எதிர்கால வாழ்க்கைத் தேவைகளையும் கணக்கிலெடுத்து நிறுவப்படும் தொழிற்சாலைகளில் அவர்களுக்கு ஓர் பங்கு கொடுக்கவேண்டும்.
ஆதிதிராவிட மக்கள் முன்னேற்றத்திற்கென தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. கல்வி, வேலைவாய்ப்புகளில் ஒதுக்கீடு, வீட்டுவசதி, தொழில்முனைவை ஏற்படுத்துதல், இலவசங்கள் வழங்குதல், தீண்டாமை ஒழிப்பு சட்டம், என பலப்பல முயற்சிகளை செய்து வருகிறது. இருப்பினும் பெரும்பாலான திட்டங்களுக்கு பயனாளிகள் கிடைப்பதில்லை. இதன் மூலம் அம்மக்கள் எல்லோரும் முன்னேறிவிட்டார்கள் என்றர்த்தம் இல்லை. அத்திட்டங்கள் அம்மக்களின் உண்மையான தேவைகளை பூர்த்தி செய்யவில்லை. முழுமைபெற்றதாக இல்லை என்பதுதான். இதை கருத்தில் கொண்டு, அரசு தன் அனுகுமுறையில் சில மாற்றங்களை கொண்டுவர வேண்டும்.
· ஒவ்வொரு சிற்றூர்கள் முதல் பெரும் நகரங்களில் வசிக்கும் ஆதிதிராவிட மக்கள் அந்தந்த பகுதி முன்னேற்றத்திற்கென உள்ளாட்சி அமைப்புகள் மூலமாகவோ அல்லது தனி சங்கங்கள் மூலமாகவோ 100 பேர்களுக்கு குறையாமல் ஒன்றுகூடி தங்கள் தேவைகளை பட்டியலிட்டு அரசுக்கு அனுப்பலாம். அரசாங்கள் அவைகளில் திருத்தம் எதுவும் செய்யாமல் செய்து தர வேண்டும். திருத்தம் தேவைப்படுவதாகத் தோன்றினால் ஆதிதிராவிட மக்கள் நல வாரியம், துறை செயலாலர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட வருவாய்துறை அதிகார்களிடம் கலந்தாலோசனை பெற்று அக்கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். அம்மக்கள் தங்கள் கோரிக்கைகளை வருடத்திற்கொரு முறை தெரிவிக்கலாம். அதையே அரசு அப்பகுதி ஆதிராவிட மக்களின் முன்னேற்றத்திட்டமாகக் கொண்டு செயல்படலாம்.
· அம்மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக அரசு 500 குடும்பங்கள் உள்ள பகுதியில் சுமார் 50 பேர் வேலைவாய்ப்பு பெரும் வகையில் ரூ.1 கோடி முதலீட்டில் மாற்றுத் தொழிற்சாலைகளை நிறுவ வேண்டும். அத்தொழிற்சாலைகள் மூலம் வரும் வருமானத்தை மீண்டும் அப்பகுதி மக்களின் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மற்றும் முன்னேற்றத்திற்கென செலவிட வேண்டும்.
· உள்ளாட்சி அமைப்புகளில் மூன்றில் ஒரு பங்கு வீதம் ஆதித்திராவிட மக்கள் வாக்காளர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கென சிறப்புத் தலைவர் அம்மன்றங்களில் நியமிக்கப்பட வேண்டும்.
· தற்போது செயலில் இருக்கும் அரசின் அனைத்துவித திட்டங்களிலும் பயனாளிகள் கிடைக்கச் செய்யவும், அத்திட்டங்களின் மூலம் வழங்கப்பெறும் பயன்பாடுகளை அதிகரிக்கவும் அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும். அதேபோல் அத்திட்டங்களுக்கென வழங்கப்பட்ட நிதி வேறு எதற்கும் திசை திருப்பி விட முடியாதபடி கண்கானிக்க வேண்டும்.
· தற்போது கடைபிடிக்கப்படும் அரசின் மதுக்கொள்கையால் அதிகம் பாதிக்கப்படுவது தலித்களாக உள்ளனர். ஆகவே அரசின் மதுக்கொள்கையில் உடனடி மாற்றம் வேண்டும்.
· அரசின் இடஒதுக்கீட்டுக்கொள்கை முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்று கண்கானிப்பதற்காகவும் பல்வேறு திட்டங்களை கண்கானிக்கவும் அதிகாரம் பெற்ற குழு அமைக்கப்பட வேண்டும். அக்குழு அம்மக்களால் 5 வருடத்திற்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
மீனவ மக்கள் முன்னேற்றத் திட்டம்:
தமிழக அரசு மீனவர் நலத்துறையின் நலத்திட்டங்கள், உதவிகள் எதுவும் பயனுள்ள வகையில் மீனவ மக்களுக்கு அமையவில்லை. அந்த உதவித் திட்டங்களை பயன்படுத்தக்கூட பெரும்பாலான மீனவர்கள் தயாரில்லை. மத்திய மாநில அரசுகளிடமிருந்து அவர்கள் எதிர்பார்ப்பது இந்த இலவச உதவிகளை அல்ல. கெடுபிடி சட்டங்கள், இலங்கை நாட்டின் அராஜகங்கள், போன்றவற்றிலிருந்து அவர்கள் விடுபட வேண்டும் என்பதே அவர்களின் முதல் விருப்பமாகும். “மீன் பிடித்துத் தருவதை விட மீன் பிடிக்க கற்றுத்தருவதே மேல்” என்ற புகழ்பெற்ற வாசகத்தைப் போல மீன் பிடிக்க கற்றுத்தரக்கூட வேண்டும், கெடுதல் செய்யாமல் இருப்பதையே அவர்கள் விரும்புகிறார்கள்.
· இலங்கை 1974ம் ஆண்டு கச்சத்தீவு உடன்படிக்கையில் உள்ள ஷரத்துகளை இலங்கை அரசு மீறுபோது தட்டிக்கேட்காத இந்திய அரசே 500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களின் சாவுக்குக் காரணமாகும். இதை எதிர்த்துப் போராடாத தமிழக ஆளும் கட்சிகள் இந்தப் படுகொலைகளுக்கு சாட்சிகளாக இருந்துள்ளன. இதற்கெல்லாம் விடிவாக கட்சத்தீவு இலங்கை அரசிடமிருந்து மீட்கப்பட வேண்டும். அதற்கான ஜனநாயக வழிமுறைகளின்படி அனைத்ஹ்டு வழிகளிலும் மக்கள் சக்தி கட்சி போராடும்.
· மீன்பிடித்தலில் மீனவர்கள் உடனுக்குடன் துனைக்கோள்கள் உதவியை பெறும் வகையில் நவீன தொழில்நுட்ப உதவிகள் மீனவர்களுக்கு மத்திய மாநில அரசுகளின் கூட்டு முயற்சியால் ஏற்படுத்தப்பட வேண்டும்.
· மீனவ மக்கள் வசிக்கும் உள்ளாட்சி மன்றங்களுக்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும். அதன் மூலம் அவர்களுக்கான கோரிக்கைகளை அவர்களே தயாரித்து அரசுக்கு அனுப்பி செயல்படுத்த வழிவகைகள் செய்யப்பட வேண்டும்.
· மீனவ மக்கள் வசிக்கும் பகுதிகளில் மாற்றுத் தொழில்களை அரசு உருவாக்க வேண்டும். அதற்கெனத் தனியாக ரூ.1 கோடி அரசு திரும்பப்பெறும் முதலீடாக செலவிடலாம். கூட்டுறவு சங்கங்கள் அல்லதது மகளிர் சுயஉதவிக் குழுக்கள் வாயிலாக அரசு இம்முதலீட்டை மேற்கொள்ளலாம்.
· மீனவ மக்கள் உள்ள பள்ளிகளில் மாணவர்-ஆசிரியர் விகிதம் 25% என்கிற விதத்திலும் பள்ளிக்கூடங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படும் வகையிலும் சிறப்பு நிதிகள் அரசால் ஒதுக்கப்ட வேண்டும். கட்டாய இலவச பள்ளிக்கல்வி வழங்கப்பட வேண்டும்.
· கடல் சார்ந்த பொருளாதாரத்தை இயற்கைவளமாக கருதி வெளிநாடுகளுக்கு அதில் முதலீடு செய்ய அனுமதி மறுக்கப்பட வேண்டும்.
மலைவாழ் மக்கள் சமூக பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத் திட்டம் :
காடுகள் மத்திய மாநில அரசுகளின் பொதுப்பட்டியலில் இருப்பததால் மத்திய மாநில அரசின் வனத்துறை அதிகாரிகளின் பிடியில் மலைவாழ் மக்கள் சிக்கித் தவிக்கிறார்கள். அவர்களின் கெடுபிடியால் மலைவாழ்மக்களின் இயற்கை வாழ்வுரிமை சீரழிக்கப்பட்டு தீவிரவாதிகளாக மாறும் கொடுமை இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் நடைபெற்று வருகிறது. உண்மையில் காடுகள் பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு பணிகளைய் மாநில அரசு மேற்கொள்வதே முறையானதாக இருக்கும். ஆனால் வனபாதுகாப்பு, வன உயரின பாதுகாப்பு என்கிற பார்வையிலேயே மாநில அரசு கொள்கை வகுத்திருக்கிறது. இடத்திற்கு தகுந்தார்போல் அதன் காடுகள் கட்டுப்பாட்டு விதிகளை மாற்றுதல், தளர்த்துதல் கண்கானித்தல் போன்ற பணிகளை மாநில அரசு மாற்றி அமைக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.
· இவ்வாறு கடினமான கட்டுப்பாட்டு முறைகளால் மலைவாழ் மக்கள் இன்னல்களுக்கு ஆளாவதை மாற்றி அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர மாநில அரசானது காடுகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளை புதிதாக உருவாக்க வேண்டும்.
· மலைவாழ் மக்களுக்கு முறையான பட்டா வழங்க வேண்டும்.
· பிற பகுதி மக்களுக்குக் கிடைக்கும் அனைத்து கல்வி, மருத்துவம், பொருளாதார வசதிகள் கிடைக்கவும் அரசு முணைப்பு, சலுகை காட்ட வேண்டும்.
· பேரளவுத் தொழில்கள் தவிர்த்து சிறு குறு தொழில்கள் அங்கே ஏற்பட மாநில அரசு ஊக்குவிக்க வேண்டும்.
· மலைவாழ் மக்கள் பகுதிகளில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். அவர்கள் மாநில அரசு இயந்திரங்களை சார்ந்திருத்தல் தவிர்க்கப்படவேண்டும். அதாவது பட்டா மாற்றம், சான்றிதழ், பல்வேறு வகையான, வருவாய்துறை வழங்கும் உரிமம், உதவித் தொகை பெறுதல் போன்ற அதிகாரங்கள் அங்குள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு சிறப்பு அதிகாரங்களாக வழங்கப்பட வேண்டும்.
சென்னை நகர் குடிசை பகுதி மக்கள் முன்னேற்றத்திட்டம்:
சென்னை நகருக்குள் கூவம், நதிக்கரையோரத்தில் சுமார் 40 வருடங்களுக்கும் மேலாக வசித்து வந்த மக்களை அப்புறப்படுத்தி கண்ணகி நகர், செம்மஞ்சேரி பகுதியில் அடுக்குமாடி கட்டிடத்தில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். குடிசையில் வாழ்ந்த மக்களை கோபுரத்தில் அமர்த்தி வாழவைப்பதாக சொல்லிக்கொண்டாலும் உண்மையில் அம்மக்களின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டு மேலும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். நகருக்கு வெளியே அருகாமையில் எவ்வித வேலைவாய்ப்பிற்கும் வழியில்லாமல் குறுகிய இடத்திற்குள் வசிப்பதால் பலப்பல துன்பங்கள். அடிதடி, வன்முறை, ஏமாற்று இவைகளே அங்கு இயல்பாகிவருகின்றன. திரும்பவும் நகருக்குள் கொண்டுவந்து அவரவர்கள் வசித்த இடங்களின் அருகாமையிலேயே அடுக்குமாடி வீடுகள் கட்டி குடியமர்த்தலாம் இல்லையெனில் சில சீர்திருத்த நடவடிக்கைகளை அரசு உடனடியாகச் செய்ய வேண்டும்.
· ஆயிரம் குடும்பங்களுக்கு ஒரு மருத்துவர் வீதம், 100 படுக்கைவசதி கொண்ட மருத்துவமனை அவ்வளாகத்தில் உடனடியாக அமைக்கப்பட வேண்டும்.
· அரசு பள்ளிகளை தரமுயர்த்தத் தேவைப்படும் முயற்சிகளைப் போன்றே அப்பகுதிகளில் உள்ள பள்ளிக்கூடங்களில் சீர்திருத்த சிறப்பு பயிற்சி வகுப்புகள் திறக்கப்படவேண்டும். அப்பள்ளிக் கூடங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை பெருக்க வேண்டும். 25 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்கிற விகிதத்தில் கடைப்பிடிக்க வேண்டும்.
· அரசாங்கமே அங்கு தொழிற்சாலைகள் துவக்க வேண்டும். சிறு குறு தொழில்கள், குடிசைத் தொழில்களை அப்பகுதியில் அரசே உருவாக்கி நடத்த வேண்டும். ஒரு குடும்பத்திற்கு ஒருவர் என்கிற விகிதத்தில் வேலைவாய்ப்பை அரசு பெருக்க வேண்டும்.
· வீடுகள் பராமரிப்பு, சாலைகள், போக்குவரத்து, காவல் தகவல் பரிமாற்றம் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளாய் பெருக்க ரூ.200 கோடி ஒதுக்கி தற்போதைய நிலைமையை உடனடியாக சீராக்க வேண்டும்.
பணைத் தொழில் :
மக்கள் இயற்கையை சார்ந்து வாழ்ந்த காலத்தில் பனைமரத்தின் பயன்கள் மிகவும் அதிகமாகும். உணவுப் பொருட்களாகவும், வீடு கட்டவும், வீட்டு உபயோகப் பொருட்களாகவும் பனைமரப் பொருட்கள் தமிழர்களின் வாழ்வியல் அடையாளாங்களாக இருந்தன. அத்தொழிலை பெரும் எண்ணிக்கையிலான மக்கள் செய்துவந்தனர். இன்றைக்கு அத்தொழில் நலிவடைந்து வருகிறது. அத்தொழிலை செய்துவரும் மக்கள் பின்னடைந்து வருகின்றனர். கைவினைப் பொருட்களின் தேவை வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் ஏராளமாக உள்ளன. அதைப் பயன்படுத்தி இத்தொழிலில் அதிக வருமானம் வரும் வகையில் அரசு இத்தொழிலை ஊக்குவிக்கலாம்.
· பனைமர கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி வாய்ப்புகளை அரசு கண்டறிந்து கொடுக்கலாம். அதற்கென சிறப்பு முனையங்களை ஏற்படுத்தப்பட வேண்டும்.
· பனைமரங்கள் சொறிவுள்ள இடங்களில் விரிவாக்கம் மற்றும் தொழில் உதவி மையங்களை அரசு உருவாக்கி ஊக்கப்படுத்த வேண்டும்.
· கள்ளுக்கான தடை நீக்கப்பட வேண்டும். மக்களின் சுகாரத்ததிற்கு தீங்கிழைக்காதவாறு கள் இறக்க அனுமதியளிக்க வேண்டும்.
மதுக்கொள்கை :
..... மதுவிலக்கை ரத்து செய்வதனால் கிடைக்கக்கூடிய வருவாய் என் மனக்கண் முன்னால் ஒரு விநாடி தோன்றியது. அதற்குப் பின்னால், அழுகின்ற தாய்மார்களின் உருவமும், குழந்தைகளின் கதறலும், மனிதன் தன் அறிவை இழந்து காட்டுமிராண்டி போல் தெரியும் காட்சிதான் என் கண் முன்னால் நிற்கிறது. ஆகையால் மதுவிலக்கு ரத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு விடை சொல்வோம். அதற்கு மாறாகச் சிரிக்கின்ற தாய்மார்களின் முகங்களும், குதூகலம் உள்ள குடும்பங்களையும் குடிபோதைக்கு அடிமை இல்லாத மக்களையும் வரவேற்போம்" என்றார் 1968ல் மதுவிலக்கு மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவராக இருந்த அறிஞர்அண்ணா. ஆனால் பலரின் எதிர்ப்பையும் மீறி 1971ல் திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் மதுக்கடைகளை திறந்தார். பிறகு நடந்ததெல்லாம் எல்லோருக்கும் தெரிந்த வரலாறு.
‘டாஸ்மாக்’ மூலம் அரசுக்கு கிடைக்கும் வருவாய் :
2006 – 2007 – 7,300 கோடி
2007 – 2008 – 8,822 கோடி
2008 – 2009 – 10,601 கோடி
2009 – 2010 – 12,491 கோடி
2010 – 2011 – 15,000 கோடி (குறைந்தபட்சம்)
_____________________________________________________
மொத்தம் – ரூ. 54,200 கோடி
_____________________________________________________
இதில் 13 லிருந்து 16 வயது பள்ளி மாணவர்கள், 17 வயது முதல் 25 வயது வரை உள்ள இளைஞர்கள் மது உட்கொள்வதால் வரும் வருவாய் இல்லாமல் தமிழகத்தில் மது உட்கொள்வதில் 50% லிருந்து 60% வரை உள்ளவர்கள் தினக்கூலி வாங்கி குடும்பம் நடத்தும் ஏழைகளாக இருக்கின்றனர் என பல ஆராய்ச்சி முடிவுகள் சுட்டிக் காட்டுகின்றன. அதாவது கடந்த 5 வருட திமுக ஆட்சியில் மது மூலம் அரசுக்கு கிடைத்த வருமானத்தில் ரூ.30,000 கோடிக்கு மேற்பட்ட பணம் சுமார் 50 இலட்சம் ஏழை மக்கள் தினமும் பெறும் கூலி மூலம் வருகிறது.
ஏழை மக்களுக்கு 2006-2011 திமுக ஆட்சியில் பல இலவசங்களை கொடுத்து வருவதாக அவ்வப்போது அறிவிக்கிறது. இது போன்ற ஏழை மக்களுக்கு(மட்டும்) அரசு இலவசங்களுக்காக செலவழித்த தொகை :
இலவச தொலைக்காட்சி – 1000 கோடி
இலவச கியாஸ் ஸ்டவ் – 250 கோடி
1 ரூபாய்க்கு அரிசி – 2500 கோடி
இலவச ‘கான்கிரீட்’ வீடு – 2250 கோடி
இலவச காப்பீடு – 500 கோடி
_______________________________________________________________________
மொத்தம் - ரூ. 6500 கோடி
_______________________________________________________________________
ஏழை வீட்டுத் தலைவர் மது அருந்துவதால் வீட்டில் ஏற்படும் குடும்ப பிரச்னைகள், பெண் மீதான வன்கொடுமைகள், பாதிப்புக்குள்ளாகும் குழந்தைகளின் கல்வி, சமூக சீர்கேடுகள் என பட்டியல் நீள்கிறது. ஏழையாக பிறந்து ஏழையாகவே வளர்ந்து அவர்கள் ஏழையாகவே இருக்கிறார்கள். அனால் முதல்வர் கருணாநிதி அவர்கள் “ஏழையாகப் பிறந்து, வாழ்ந்து – ஏழைகளுடன் நட்பு கொண்டு – ஏழைகளின் வாழ்வுக்காகத்தான் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
அப்படியானால் 2006-2011 திமுக ஆட்சியில் பல ஏழை பெண்களின் வாழ்வை கேள்விக்குறியாக்கி, பல ஏழை வீட்டு மாணவர்களின் கல்வியைக் கெடுத்து, அகால மரணங்கள் ஏற்படுத்தி ஏழை தினக் கூலிகளிடமிருந்து அபகரித்த 23,500 கோடி ரூபாய் எங்கே?
ஆக மது என்பது உடல் நலக்கேடு என்பதனை கடந்து மக்களின் சமூக பொருளாதார வாழ்வையும் சீரழிக்கும் மதுவை படிப்படியாக ஒழிக்கும் விதமாக மக்கள் சக்தி கட்சி முன்வைக்கும் திட்டங்கள்….
· தமிழகத்தில் இருக்கும் 6630 கடைகளில் முதல் நாளே 3000 கடைகள் மூடப்படவேண்டும்.
· மாவட்டத்துக்கு 3 என்ற எண்ணிக்கையில் தமிழகம் முழுதும் 100 மறுவாழ்வு மையங்கள் நிறுவப்படவேண்டும். அதற்கு தேவையான மனநல மருத்துவர்கள் நியமிக்கப்படவேண்டும். மது குறித்த பாடங்கள் எடுக்கப்படவேண்டும்.
· மது குடிப்பதனால் வரும் கேடுகளின் பயங்கர முகத்தை பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் உட்புகுத்தப்படவேண்டும்.
· புதிதாக மது அருந்துபவர்கள் கிட்டத்தட்ட இல்லை என்பதனை உறுதி செய்ய கன்கானிப்பு தீவிரப்படுத்தப்படவேண்டும்.
· மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு 5 இலட்சம் அபராதமும் 6 மாத சிறை தண்டனையும் நிறைவேற்ற சட்டங்கள் மாற்ற வழிவகை செய்யப்படவேண்டும்.
· ஆண்டுக்கு 15 ஆயிரம் கோடி வருவாய் வரும் இந்த மது விற்பனையை மூன்றே ஆண்டுகளில் 6 ஆயிரம் கோடியாக குறைக்கப்படவேண்டும்.
· மூன்றாண்டுக்குப் பின்னும் மது அருந்தி வீட்டில் பெண் கொடுமை செய்தல், குழந்தைகள் கல்விக்கு ஊறுவிளைவிக்கும் நபர்களை கணக்கெடுத்து அவர்களுக்கு சிறப்பு முகாம் மூலம் மீண்டும் மறுவாழ்வுக்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படவேண்டும்.
· நான்காம் ஆண்டின் முடிவில் மதுவின் விற்பனையிலும் மதுக்கடைகளின் எண்ணிக்கையிலும் இன்றைய அளவைவிட 80% விழுக்காடு குறைக்கப்ப்வேண்டும்.
· இந்தியாவில் மற்ற மாநிலங்களிலும் இந்த முறையை பின்பற்ற அறிவுறுத்தப்படவேண்டும்.
இவ்வாறு படிப்படியாக மது விற்பனையை குறைத்தும் புதிய தலைமுறைக்கு மதுவின் தேவையையும் அவசியத்தையும் போக்கி மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும்.
இ – கவர்னன்ஸ் (கனினிமயமாக்கப்பட்ட அரசுத்துறை)
இன்று இருக்கும் தொழில்நுட்பத்தை அரசுத்துறையில் பயன்படுத்துவதன் மூலம் வெளிப்படைத்தன்மைக்கும் விரைவான சேவைக்கும் வழிவகுக்கும். மத்திய மாநில அரசுகள் அடையாள அட்டை விநியோகித்தல் பத்திரப்பதிவில் கனினிமயம் என தோற்றம் அளித்தாலும் கனினிமயமாக்குவதில் 2% கூட எட்டவில்லை என்று தான் கூறவேண்டும். உண்மையான முழு பயனை அடையவேண்டுமென்றால் அரசுத்துறைகளில் ஒரு கனினி புரட்சியே நடத்தப்படவேண்டியுள்ளது. முழுமையாக செய்துவிட்டால் இன்று நடப்பது போன்று இலஞ்ச-ஊழல் நடப்பது கடினமாகிவிடும் என்பதால் இன்று உள்ள அரசியல் கட்சிகள் நிச்சயமாக செய்யாது என நம்பலாம்.
பயன்கள் :
நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் குடியுரிமை அடையாள அட்டை கொடுத்து ஒரு அரசு கனினிமயமானால் என்ன பயன்களை அனுபவிக்கலாம் என
· பண பரிமாற்றங்கள் அனைத்தும் வெளிப்படையாவதால் கருப்புப் பணம், இலஞ்சம் - ஊழல் என்பது அதிகளவில் கட்டுப்படுத்தப்படும்.
· ஒரு தனிநபரின் முழு விவரங்களை ஓரிடத்தில் சேகரித்து எங்குவேண்டுமானாலும் சரிபார்க்கலாம் என்பதால் நாட்டில் குற்ற நடவடிக்கைகள் கனிசமான அளவில் தடுக்கப்படும்.
· ரேஷன் அட்டை, டிரைவிங்க் லைசன்ஸ், வாக்காளர் அடையாள அட்டை என தனித்தனியாக கையாள்வதை தவிர்க்கலாம்.
· இலட்சக்கணக்கில் காமெராக்கள் பொறுத்தி கண்கானிப்பின் கீழ் கொண்டுவருவதன் மூலம் ஆயிரக்கணக்கான குற்றங்களை தவிர்க்கப்படும்.
· பணப்பரிமாற்றங்கள், நிலப்பரிமாற்றங்கள், தொழில் சார்ந்த பரிமாற்றங்கள் வெளிப்படையாவதால் மனிதர்களுக்குள் ஆங்காங்கே நடக்கும் மோசடிகள் குறைந்து நீதிமன்ற வழக்குகள் கணிசமாக குறைக்கப்படும்.
· இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பல்கி பெருகும்.
· சேவைகள் விரைவாவதால் தொழில்கள் பெருகுவதன் மூலம் பொருளாதாரம் மேம்படும்.
விவசாய முன்னேற்றம்.
நாட்டில் வேறெந்த தொழிலை விடவும் மிக அதிகமானோர் ஈடுபட்டுள்ள தொழில் விவசாயம் ஆகும். அனைத்து பிற தொழில்களின் வளர்ச்சிக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆதாரமாக இருப்பது விவசாயம்தான். ஆரம்ப தொழில் மட்டுமல்ல மனிதன் உலகில் இருக்கும்வரை என்றும் மறைந்துவிட முடியாத தொழிலும் விவசாயம்தான். அப்படிப்பட்ட விவசாயத்தின் மேன்மைக்கு அதை செய்து வரும் விவசாயிகளின் உயர்வுக்கு நல்வழி காட்டாமல் வேறெந்த முன்னேற்றத்தைப்பற்றி பேசியும் பயனில்லை.
அவசியமும், முக்கியத்துவமான தொழிலாக இருப்பதால் விவசாயம் மன்னராட்சி காலத்திலிருந்தே பெரும் ஆளுமைக்கு உட்பட்டு வருகிறது. மற்ற தொழில் முதலாளிகளைப்போல், அரசை லாபி செய்யும் வல்லமையும் இல்லாமல் ஒருங்கிணைக்கப்பட்ட வலுவான சங்கங்களையும் அமைக்க முடியாமல் விவசாயத்தின் குரல் ஜனநாயக அரசியல் அரங்கில் பின்தள்ளப்பட்டு விட்டது. போதிய விழிப்புணர்வும், அறிவியல் தொழில்நுட்பமும் இல்லாமல் மக்களால் விவசாயம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. எனவே அதை சீர்படுத்த மிகுந்த முனைப்பும், சக்தியும் செலவழிக்க வேண்டும். அதை மனதில் கொண்டு நமது கட்சி கீழ்க்கண்ட அணுகுமுறைகளோடு விவசாயத்தைப் பார்க்கிறது.
· விவசாயத்தை முதலில் அரசின் பிடியிலிருந்து விடுவித்தல்.
· இடைத்தரகர்களின் ஆதிக்கத்தை ஒடுக்குதல், விளைப்பொருட்களின் விலையில் பெரும்பங்கு விவசாயிகளுக்கு சென்றடைய உதவுதல்.
· சந்தைக்கும் விளைவிக்கும் இடத்திற்குமான போக்குவரத்து வசதிகளை அதிகப்படுத்துதல், அதற்கான செலவுகளை குறைத்தல்.
· பாதுகாப்பு, பதப்படுத்துதல் வசதிகளை அரசு உதவியுடன் செய்து கொடுத்தல்.
· நேரடியாக விவசாய விளைபொருட்களை பயன்படுத்தும் தொழில்கள் அருகாமையில் ஏற்பட ஊக்குவித்தல்.
· மாற்று உணவு தயாரிக்கும் பேரளவு நிறுவனங்கள் விவசாய பொருள்களின் மீது ஊக வணிகத்தில் ஈடுபடுவதை முறைப்படுத்துதல்.
· விவசாய நில உச்ச வரம்பு(15 ஏக்கர்) விதிகளை தளர்த்தி பேரளவிலான விவசாய உற்பத்தியில் ஈடுபட வழி ஏற்படுத்துதல்.
· எதிர்கால சந்ததியினருக்கும், இன்றைய சந்ததியினருக்கும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உத்தரவாதமுள்ள இயற்கை விவசாய முறையை அறிவியல் பூர்வமாக அணுகி அதிகரித்தல்.
· சர்க்கரை, அரிசி விலைகளின் மீதான அரசின் நுகர்வோர் சார்பு விலைக் கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல், அதற்காக மத்திய அரசை வலியுறுத்தல்.
· அறிவியல், தொழில்நுட்ப கருவிகள், வாகனங்கள், தொழிலறிவு, சர்வதேச தொழில்நுட்பம் எல்லாம் தங்குதடையின்றி கிடைக்கச் செய்தல், அதை அரசு முன்னின்று எடுத்து செய்தல்.
· வேளாண் விரிவாக்கப் பணிகளில் புரட்சிகரமான முறையில் அதிக ஊக்கமும், ஆக்கமும் கொடுத்து நவீனப்படுத்துதல்.
· விவசாய உற்பத்திக்கு பெருமளவில் மனித உழைப்பு வழங்கப்படுகிறது. எங்கெங்கு முடியுமோ அங்கெல்லாம் அறிவியல் கருவிகளை பயன்படுத்தும் முறைகளை ஊக்குவித்தல்.
· அரசு கொள்முதல் செய்வதில் காலம், விலை, அளவு, அவசியம், முறை போன்றவைகளை ஒழுங்குபடுத்துதல்.
· விவசாயத்தை ஒட்டுமொத்தமாக நிலம், நீர், விலை, சந்தை, விதை, கருவிகள், போக்குவரத்து, பயிர் பாதுகாப்பு, பதப்படுத்துதல், இன்சூரன்ஸ் என ஒவ்வொரு காரணிகளும் நெல், கரும்பு, தென்னை, வாழை, தோட்டப்பயிர்கள், பணப்பயிர்கள், தானியங்கள், காய்கறிகள், பிற பயிர்கள் போன்ற ஒவ்வொரு இனங்களின் மீதும் வெவ்வேறு வகைகளில் தாக்கத்தை உண்டு பண்ணுகிறது என்பதை அறிந்து ஒவ்வொன்றுக்கும் தனித்தனி கொள்கை, சீர்திருத்தங்களை மேற்கொள்ளுதல்.
· அதேபோல் விவசாயிகளின் உயர்வுக்கு வழிகாணும் போது சிறு விவசாயிகள், பெரும் விவசாயிகள், சிறு குத்தகைதாரர்கள்,பெரும் குத்தகைதாரர்கள், கூட்டு பண்ணைகள், விவசாய கூலிகள் என ஒவ்வொருவரும் விளை பொருட்களின் விலை, உழைப்பிற்கான விலை, சந்தை, போக்குவரத்து, கல்வி, வாழ்விட பிரச்சனைகள், சமூக பிரச்சனைகள் போன்றவைகளை வெவ்வேறு அளவுகளில், விதங்களில் எதிர்கொள்கிறார்கள் என்பதையறிந்து அவரவர்களுக்கு ஏற்ற வகைகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளுதல்.
· அனைத்து விவசாய சங்கங்களை ஒன்றிணைத்து அவர்களது கோரிக்கைளை ஒன்று திரட்டி புதியதோர் விவசாய புரட்சிக்கு வழிவகுத்தல்.
· விவசாய பொருட்களை பதப்படுத்தி உள்நாட்டு மற்றும் அயல்நாட்டு ஏற்றுமதி செய்யும் கலாச்சாரத்தை விவசாயத்தில் பரப்புதல்.
· நீர் மேலாண்மை, தேசிய நதிநீர் இணைப்பிற்காக வலியுறுத்துதல் மற்றும் அண்டை மாநிலங்கள் இடையேயுள்ள காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு பிரச்சனைகளை நியாயமான முறையில் முடிவுக்கு கொண்டுவருதல்.
· மாநில எல்லைக்குட்பட்ட நீர் வளங்களை முழுமையாக பயன்படுத்துதல்.
· கூட்டுப் பண்ணை விவசாயத்தை ஊக்குவித்தல்.
· கூட்டு கிராம விவசாயம் என்கிற கூட்டு விவசாய முறையை ஊக்குவித்தல். அதாவது அவரவர் நிலங்கள் அவரவர்களிடையே இருந்தாலும் விவசாயத்தை பொதுவில் செய்தல். கூட்டு பொறுப்பு வகிப்பதால் விவசாய கடன் வசதியும், கடனுக்கு பாதுகாப்பும் உறுதி செய்யப்படும்.
முக்கிய பிரச்னைகளில் கட்சியின் நிலைப்பாடு:
ஈழம்:
இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ளதைப் போல இரு வேறு தேசிய இனங்களான தமிழ் மக்களும், சிங்கள் மக்களும் கூட்டாட்சி முறையில் தங்கள் அரசியலமைப்பை வகுத்திருக்க வேண்டும். ஆனால் சிங்கள பேரினவாத ஆட்சியை பெரும்பான்மை மக்கள் தமிழரிடையே திணித்தனர். அதன் விளைவாக உள்நாட்டு யுத்தம் நடந்தது. மேலும் மேலும் ஈழத்தமிழர்கள் அடக்கப்படுகிறார்கள். இனி ஈழ நாடு அமைந்தால் மட்டுமே அம்மக்கள் பிற உலக சமுதாய மக்களைப்போல சுதந்திரம் பெற்ற குடிமக்களாக வாழமுடியும். அந்நிலையை அவர்களுக்கு ஏற்படுதித் தரவேண்டிய தார்மீகப் பொறுப்பு இந்திய தமிழர்களுக்கு மட்டுமல்ல, இந்திய நாட்டிற்கு மட்டுமல்ல அது சர்வதேச மனித சமூக்த்தின் கடமையாகும். இதுவே மக்கள் சக்தி கட்சியின் நிலைபாடாகும்.
மாநில – மத்திய – வெளியுறவுக்கொள்கை
இந்தியாவில் மக்களாட்சி என்பது தலைகீழாக கட்டமைக்கப்பட்டுள்ளது. மக்கள் நேரடியாக பங்குபெரும் கிராம சபைகளை வலுப்படுத்தி பஞ்சாயத்துகள் தங்கள் தேவைகளை தாங்களே முன்வைக்கும் முறையை செயல்படுத்த வேண்டும்.
மாவட்ட அளவிலேயே முடித்துக்கொள்ளக்கூடிய விஷயங்களுக்கு மக்களை தேவையில்லாமல் ஒரு மாநிலத்தின் தலைநகருக்கு அலைகழிக்கும் நடைமுறையை மாற்றி அது மாவட்ட தலைநகரிலேயே நிறைவுசெய்யப்படவேண்டும்.
அதே போல் இராணுவம், நாணயம், இரயில்வே, வெளியுறவுக்கொள்கை, நதிநீர் பங்கீடடு, மாநிலங்களுக்கிடையேயான உறவு, முதல் சில ஆண்டுகளுக்கு நலிந்த மாநிலங்களுக்கு மற்ற மாநிலங்களில் இருந்து பொருளாதார உதவியைப் பெற்றுத்தருவது போன்றவற்றை மட்டும் மத்திய ஆளுமையில் வைக்கவேண்டும். நாட்டின் தொழிற்துறையை மேம்படுத்தி வேலைவாய்ப்பை பெருக்கவும் மக்களின் அனைத்து தேவைகளை பூர்த்தி செய்யவும் மாநில அரசுகள் போதிய அதிகாரம் பெற்ற சுயாட்சி அமைப்பாக இருக்க வேண்டும்.
சுய நிதி ஆதாரமுள்ள அமைப்பாகவும் மத்திய அரசை சாராமலும் நடக்கத்தக்க ஆட்சியதிகாரம் வேண்டும். இந்தியாவில் மாநில அரசுகள் மத்திய அரசின் முகவர்களாக இருக்கும் நிலை மாற வேண்டும். கவர்னர் பதவி ஒழிப்பு – பொதுப்பட்டியலை நீக்கி பெரும்பாலானவற்றை மாநில அரசுக்கு வழங்குதல் – மத்திய பட்டியலில் எண்-97ல் உள்ள எஞ்சிய அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்குதல். முற்றிலும் மாநிலத்திற்குள் இயங்கும் நிறுவனங்களில் வருமானவரி– நிறுவனவரி – கலால் வரி போன்றவற்றில் மாநில அரசுகளுக்கு வரி விதிக்கும் உரிமை வழங்குதல். கல்வியில் பாடத்திட்டம் நிர்ணயித்தல், தவிர பிறா கல்விச் சேவையில் பாடத்திட்டம் நிர்ணயித்தில், உருவாக்குதல் தவிர பிற அதிகாரத்தையும் மாநில அரசுக்களுக்கு வழங்குதல்…
இந்த அதிகாரப்பகிர்வு நடந்தேறினால் மட்டுமே நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் அனைத்து மக்களும் பங்குகொள்ளும் வகையில் சீரடையும். உள்நாட்டில் நடந்து வரும் ஆயுதப்போராட்டம் அடியோடு மறைந்துபோகும்.
தலைமுறைகள் பல கடந்தும், அண்டை நாடான பாகிஸ்தானுடனான உறவில் இருக்கும் சிக்கல்களுக்கு சாயம் பூசி அரசியல் ஆதாயம் தேட நினைப்பதை இந்தியாவில் இருக்கும் இரு பெரும் கட்சிகள் கைவிடவேண்டும்.
ஐரோப்பிய கூட்டமைப்பைப் போன்று தெற்காசிய நாடுகளை இணைத்து கூட்டமைப்பை (South Asian Union - SAU)உருவாக்கி செயல்பட்டு, எடுக்கப்படும் முடிவுகள் அனைத்தும் மனிதகுல வளர்ச்சியும், நீதியை நோக்கியும் இருத்தல் வேண்டும்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை எல்லா இடத்துக்கு கொண்டு செல்ல தடையாக இருக்கும் அதிகாரக் குவியலை பரவலாக்கவேண்டும். வெளியுலகின் மீதான பார்வையில் சிதைந்துக்கிடக்கும் நாடுகளின் கருத்துகளை ஒன்றிணைக்கவேண்டும்.

1 comment:

  1. THE MANIFESTO SHOULD BE MODIFIED BY CONSTITUTING EXPERT COMMITTEES ON EACH SUBJECT.FOR THIS PURPOSE,EXPERTS SUCH AS THIRUVALARGAL. AUDITOR.GURUMOORTHY,MURUGAN,I.A.S.(RETD),AGRL.SCIENTIST.NAMMAZHWAR,ER.A.C.KAMARAJ,ER.KUPPURAJ,EDUCATIONISTS.ANANTHAKRISHNAN,VASANTHIDEVI,INDRESAN,etc.MAY BE REQUESTED TO LEND THEIR HANDS IN DRAFTING THE MANIFESTO SPECIFIC TO T.N.

    ReplyDelete